பழனி தைப்பூசத் திருவிழாவில் காவடி எடுத்து வழிபட்ட எல்.முருகன், சி.டி.ரவி, அண்ணாமலை. 
தமிழகம்

வேலைத் தூக்கிய ஸ்டாலினுக்கு முருகன் நல்ல ஆயுளைக் கொடுக்கவேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

பி.டி.ரவிச்சந்திரன்

வேலைத் தூக்கிய ஸ்டாலினுக்கு முருகன் நல்ல ஆயுளைக் கொடுக்கவேண்டும், என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் வழிபாடு நடத்த இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பழனிக்கு வருகை தந்தார். இவருடன் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் வந்தனர்.

பழனி நகரின் மத்தியில் அமைந்துள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து மூவரும் காவடி எடுத்து பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோயில் வரை நடந்து வந்தனர். தொடர்ந்து மலைக்கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.

பின்னர், எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”கந்தசஷ்டியை இழிவுபடுத்தியவர்களுக்கு வேல் யாத்திரை நடத்தி தகுந்த பாடம் புகட்டினோம். இந்து மதத்தை அவமதித்தவர்களைத் தை மாதத்தில் கிருத்திகை அன்றே வேல் தூக்க வைத்தவர் பழனி முருகன். எங்களின் கோரிக்கையை ஏற்று தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளித்த முதல்வருக்கு நன்றி.

கடவுளே இல்லை என்று சொன்ன ஸ்டாலின் இன்று இந்துக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கிறார். ஸ்டாலின் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காகப் போலியாக வேலைத் தூக்கியிருந்தாலும், அவருக்கு முருகன் நல்ல ஆயுளைக் கொடுக்கவேண்டும்.

டெல்லியில் நடைபெற்ற கலவரம் திட்டமிடப்பட்ட சதி. ஆரம்பம் முதலே போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்”.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT