தமிழகம்

சராசரியை தாண்டியது பருவமழை: தமிழகத்தில் மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவைத் தாண்டி பெய்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கான மழையில் 48 சதவீதத்தை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பெறுகிறது. இந்த காலகட்டத்தில் சராசரி மழை அளவு 44 செ.மீ. மட்டுமே.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கொஞ்சம் தாமதமாகவே தொடங்கியது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக தமிழகத் தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அக்டோபர் 1 முதல் நேற்று வரை 54 நாட்களில் 47 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது ஆண்டு சராசரியைவிட 3 செ.மீ. அதிகம். பருவமழைக் காலம் முடிய இன்னும் 38 நாட்கள் இருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த ஆண்டு மழை அளவு கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

குமரிக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகள் அருகில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய் துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு ரமணன் கூறினார்.

சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங் களிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

3 மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை, வடியாத வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் 3 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் தொடர்ந்து 17-வது நாளாக பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT