மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிக்ழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் எம்ஜிஆருக்குப்பின் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. 1989 முதல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அதன் பின்னர் 1991-ல் தமிழக முதல்வரானார், பின்னர் 2001, 2011, 2016 என மூன்று முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா 2016-ம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே புதைக்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2017-ம் ஆண்டு ஜூன் 28-ம்தேதி முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, நினைவிடம் அமைக்க முதல் கட்டமாக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நினைவிடம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் ரூ.80 கோடி மதிப்பில் அப்பணிகள் முடிக்கப்பட்டு நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது.
பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் நினைவிடம் மூன்று பிரிவாக பொதுமக்கள் பார்ப்பதற்காக திறக்கப்பட தயாராக இருந்தது. பிரதமர் மோடி நினைவிடத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் முதல்வர் பழனிசாமி திறந்து வைப்பார், ஓபிஎஸ் முன்னிலை வகிப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சரியாக 11-00 மணிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபாலுடன் திறப்பு விழா நடக்கும் இடத்துக்கு வந்தார். பின்னர் ரிப்பனை கத்தரித்து நினைவிடத்தை திறந்து வைத்தார். அவருடன் தலைமைச் செயலர் சண்முகம் உடனிருந்தார்.
நினைவிடம் திறக்கப்பட்டவுடன் முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபால், தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவிடம் மூன்று பிரிவுகளாக உள்ளது. நினைவிடம், அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது. 43 மீட்டர் அகலமும் கொண்டது. மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. நினைவிடம் முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டு, நடக்கும் வழியில் இருபுறமும் நீர்நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்தியில் ஜெயலலிதாவின் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சித்தரிக்கும் விதமாக படங்களும் , மெழுகு சிலைகளும் அமைக்கப்படவுள்ளன. மூன்றாவதாக அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு தகவல்கள் நினைவிடத்துக்கு வருபவர்கள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
நினைவிடம் திறக்கப்பட்டதை அடுத்து சீரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் அனைவரும் உரையாற்றினர். நினைவிடம் திறக்கப்பட உள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கடற்கரை காமராஜர் சாலையில் குவிந்தனர். இதனால் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டதால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.