மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை, முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2017-ம் ஆண்டு ஜூன் 28-ம்தேதி முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, 50,422 சதுரஅடியில் நினைவிடம் அமைக்க முதல் கட்டமாக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டுமானப் பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு மே 7-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வப்போது கட்டுமான பணிகளை பார்வையிட்டு வந்தனர். அதன்பின், நினைவிட கட்டுமானப் பணிக்கான கூடுதல் நிதி மற்றும் 5 ஆண்டுகள் பராமரிப்புக்கான நிதி ரூ.79.75 கோடியாக உயர்த்தப்பட்டது. சமீபத்தில் கட்டுமான பணிகளை இறுதி செய்யவும், பராமரிப்பை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.
‘ஃபீனிக்ஸ் பறவை’ போன்ற அமைப்பு கொண்ட இந்த நினைவிடத்தை, இன்று காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமிதிறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அரசு சார்பில் தலைமைச் செயலர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் கே.மணி வாசன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று காலை நடைபெற உள்ள நிலையில், காலை 6 மணி முதலே போர் நினைவுச் சின்னம் முதல், கண்ணகி சிலை வரையிலான காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதர சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நினைவு இல்லம் நாளை திறப்பு
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், நினைவு இல்லம் ஆக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த 2017 ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 24-ம்தேதி வேதா நிலையத்தை அரசுடமை ஆக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி நாளை (ஜன.28) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.