தொடர் மழை காரணமாக தீபாவளி விற்பனை மந்தமாக நடப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையில் புதிய ஆடைகள், பட்டாசு மற்றும் பொருட்களை வாங்க தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று காலையில் இருந்தே தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீவுத்திடல், ஒய்.எம்.சி.ஏ திடல் ஆகிய இடங்களில் உள்ள பட்டாசு விற்பனை மையங்களிலும் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
ஒரு சிலர் மட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளிக்கு பொருட்களை வாங்க முக்கிய கடைவீதிகளுக்கு வந்தனர். இதனால் வணிக வீதிகள் முழுவதும் குடைகளே கண்களுக்கு தெரிந்தன.
தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வருபவர்களிடம் திருடுவதற்கென்றே ஒரு கும்பல் உள்ளது. அவர்களைப் பிடிக்க போலீஸார் பல இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்தனர்.
திருடர்கள் சிக்கினர்
இந்நிலையில் தி.நகரில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற பெரம்பூரை சேர்ந்த சதீஷ்(24), மோட்டார் சைக்கிள் திருடிய மற்றொரு சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வடபழனி துரைசாமி சாலை பேருந்து நிறுத்தத்தில் பூ விற்கும் பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் பிடிபட்டனர்.