சசிகலா விடுதலை ஆவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுவது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சேலம் டவுன் ரயில்வே நிலையம் அருகே உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கிராம சபைக் கூட்டம் என்பது சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்கு இணையானது. இந்த கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுக்கும் வகையில் இந்தச் செயல் உள்ளது. மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல்.
முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் முகக்கவசம் கூட அணியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அப்போது கரோனா தொற்று பரவாதா? கரோனா தொற்றைக் காரணம் காட்டி கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்தது கண்டனத்துக்குரியது. கிராம சபைக் கூட்டம் நடத்தினால் மாநில அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோடியிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு முதல்வர் அனுமதி மறுத்துள்ளார். மேலும், காவல்துறையினரைக் கொண்டு வீடு வீடாகச் சென்று டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவர்களின் நடவடிக்கையைக் கண்டு அஞ்சாமல், திட்டமிட்டபடி பேரணி நடத்தி, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.
சசிகலா விடுதலை ஆவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுவது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் டெல்லி சென்று, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவைச் சந்தித்து விட்டு வெளியே வந்தவுடன் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி கேட்டுள்ளோம், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற எந்தத் தகவல்களையும் தெரிவிக்காமல், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியதால் மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. முருகன் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவர். அவரை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம். இது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல.
வடகிழக்குப் பருவமழையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை அளித்தும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. முதல்வர் அறிவித்த நிவாரணம் கூட வழங்கப்படவில்லை. தமிழக அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டது.
மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லை. எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறியது வேறு யாரும் இல்லை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ்எஸ்தான். ஆனால், அவர் இதுவரை ஒரு முறை கூட ஆணையத்தின் முன்பு ஆஜராகவில்லை. திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்பது முக்கியமில்லை/ பாஜகவைத் தமிழகத்தில் கால் ஊன்ற விடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே உள்ளது''.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.