அமைதியான முறையில் நடந்த விவசாயிகள் பேரணியில் காவல்துறையினர் தேவையின்றி தடியடி நடத்தியுள்ளனர் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதுச்சேரியில் இன்று (ஜன. 26) மாலை விவசாயிகள், டிராக்டர் பேரணியை நடத்தினர்.
புதுச்சேரி மாநில அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏஎப்டி திடலில் இருந்து தொடங்கிய பேரணியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
''மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. அவர்கள் ஆட்சிக்கு வரும்போது நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறினர். ஆனால், தற்போது விவசாயிகளுக்கு எதிராக மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வேண்டும் என்று விவசாயிகள் கேட்கின்றனர். ஆனால், மத்திய அரசு விலையே இல்லாத அளவுக்குச் செய்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் அப்படி இல்லை. புதுச்சேரி அரசு விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிச் செயல்படுத்துகிறது. கடந்த பட்ஜெட்டில் 37 பக்கங்களை விவசாயிகளுக்காக ஒதுக்கித் திட்டங்களை அறிவித்துள்ளோம்.
ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்கிறோம். பயிர்க் காப்பீடு முழுவதும் இலவசமாக வழங்குகிறோம். மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் புதுச்சேரியில் இலவச மின்சார திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம். இதனால் நிறைய விவசாயிகள் மனமுவந்து விவசாயம் செய்கின்றனர்.
மத்திய அரசு பாரா முகமாக இருக்கிறது. மக்களை ஏமாற்றுகிறது. டெல்லியில் விவசாயிகள் 63 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், 11 கட்டமாக மத்திய விவசாயத்துறை அமைச்சர்தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாரே தவிர, பிரதமர் ஒருநாள் கூட பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இப்போது விவசாயிகளின் போராட்டத்துக்குப் பயந்து அடிபணிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகக் கூறுகின்றனர். இன்று டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர். டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ளனர். பேரணியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பேரணி 25 கி.மீ. தூரத்துக்கு நடைபெற்றது.
இதனை உலகமே திரும்பிப் பார்க்கிறது. அமைதியான முறையில் நடைபெற்ற பேரணியில், விவசாயிகள் மீது காவல்துறையினர் தேவையின்றி தடியடி நடத்தியுள்ளனர். இதனால் ஒரு டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தப்படுகிறது. இது வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்''.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி பேசினார்.
ஏஎப்டி திடலில் இருந்து புறப்பட்ட பேரணி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, சிவாஜி சிலை, முத்தியால்பேட்டை, அஜந்தா சிக்னல், அண்ணா சிலை, புஸ்சி வீதி வழியாக உப்பளம் அம்பேத்கர் சிலை அருகே முடிவடைந்தது. இந்தப் பேரணி 10 கி.மீ. தூரம் வரை நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.