கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்குத் தினமும் இயக்கப்படும் நீலகிரி மலை ரயிலில் பயணிப்பதே தனி சுகம்தான். மலைக் குகைகள், அருவிகள், பாலங்களைக் கடந்து, இதமான சூழலில் இயற்கையை ரசித்தபடி மெல்லப் பயணிக்கும் ரயிலில் தனது கனிவான பேச்சாலும், பாட்டுப் பாடியும் கடந்த 4 ஆண்டுகளாகப் பயணிகளை மகிழ்வித்து வருகிறார் டிக்கெட் பரிசோதகர் வள்ளி (58).
கேரள மாநிலம், பாலக்காட்டை அடுத்த சொர்ணூரைச் சேர்ந்த இவர், துப்புரவுப் பணியாளராகப் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து டிக்கெட் பரிசோதகர் ஆகியுள்ளார். தினமும் டிக்கெட் பரிசோதனை வேலைகள் முடிந்தபின் பயணிகளுக்காகப் பாடத் தொடங்குகிறார். மலை ரயிலில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயணிப்பார்கள் என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், படுகா பாடல்களைப் பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் பாடுவது கூடுதல் சிறப்பு.
அவரிடம் பேசினோம்.
"எங்கள் குடும்பமே கலைக் குடும்பம்தான். ரயில்வேயில் வேலைக்குச் சேரும் முன் மேடைகளில் பாடி வந்தேன். அந்தத் தொடர்பு இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக ரயிலில் பாடி வருகிறேன். பாடகர் எஸ்.ஜானகி அம்மாவின் குரலை ஒத்த குரல் என்னுடையது என்பார்கள்.
பயணிகளுக்காக நான் பாடல்களைப் பாடி வருவதை அறிந்த அவர், ஒருமுறை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தது மறக்க முடியாத அனுபவம். அப்போது அவர் பாடிய 3 மலையாளப் பாடல்களைப் பாடினேன். அதைக் கேட்ட அவர், நீங்கள் பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என வாழ்த்தினார்.
சேவைக்கு விருது
ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு அடுத்தடுத்து வரும் இடங்களை முன்கூட்டியே தெரிவிப்பேன். அந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்வேன். எங்கு பாலம் வரும், எங்கு அருவி வரும், எந்த இடம் புகைப்படம் எடுக்க சரியான வியூ பாயின்ட் போன்ற தகவல்களைத் தெரிவிப்பேன்.
பயணிகள் என் மீது வைத்துள்ள அன்புக்கு ஈடு இணை இல்லை. இன்னும் எனக்கு ஓராண்டு பணிக்காலம் உள்ளது. அதன் பின்பு மலை ரயிலை நானும், என்னை மலை ரயில் பயணிகளும் பிரிவது எனக்குச் சற்று கடினமாக இருக்கும். பயணிகளுடனான எனது இந்த உறவைப் பாராட்டி, தென்னக ரயில்வே எனக்கு விருது வழங்கியுள்ளது” என்று வள்ளி தெரிவித்தார்.