முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மட்டும் அன்று ஆதரிக்காமல் இருந்திருந்தால் 3 வேளாண் சட்டங்கள் வந்தே இருக்காது என விவசாயிகள் மீதான போலீஸ் தடியடி குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூலில் பதிவு செய்துள்ளதாவது:
“இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளிக்காமல் உதாசீனம் செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாள் கடத்தும் நாடகங்களைத்தான் பாஜக அரசு நடத்தியதே தவிர ஆக்கபூர்வமான செயலைச் செய்யவில்லை. இந்திய நாட்டின் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை எதிரிகளாக நினைக்கிறது மத்திய அரசு.
பிரதமர், விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஏன் தீர்வு காண முயற்சி செய்யவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள்.
வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். வன்முறை சூழுமானால் அது ஒன்றே அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகளும் உணர வேண்டும். ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இரு தரப்பினரும் முயல வேண்டும்.
பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மட்டும் நாடாளுமன்றத்தில் ஆதரிக்காமல் இருந்திருந்தால், 3 வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது என்பதை நெருக்கடியான இந்த நேரத்தில் யாரும் நினைக்காமல் இருக்க முடியாது.
இனியும் பிரதமர் தாமதிக்காமல் விவசாயிகளை நேரடியாக அழைத்து அவரே பேச வேண்டும். விவசாயிகளால் நிராகரிக்கப்படும் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.