தமிழகம்

புதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம். புதுவைக்கு நேர்மையான கூட்டு முயற்சி மட்டுமே தேவை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 72-வது குடியரசு தினத்தையொட்டி அகில இந்திய வானொலி, தூர்தர்ஷனில் ஆற்றிய உரை தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துகளின் விவரம்:

”துணைநிலை ஆளுநராகப் பதவியேற்ற பிறகு இது எனது 5-வது குடியரசு தினம். கடந்த 5 ஆண்டுகளாக எங்களின் அதிக உழைப்பைத் தந்த நிதி மேலாண்மையால் மக்கள் பணம் வீணாகாமல் முக்கியச் சேவைகள் தொய்வில்லாமல் இயங்குவதை உறுதி செய்துள்ளோம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் எளியவர்களின் நிலம், சொத்துகள் அபகரிக்கப்படுவதைத் தடுத்துக் காத்திருக்கிறோம்.

ஆளுநர் அலுவலகம் ஒரு பார்வையாளராக இல்லாமல் தனக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்லாட்சியை அளித்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளும், திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்பட்ட அதிகாரிகளைக் காக்கத் தவறியதில்லை.

அதே நேரத்தில் தவறாகவும், சட்டவிரோதமாகவும் செயல்பட்ட அதிகாரிகளைக் களையெடுக்கவும் தயங்கியதில்லை. அனைத்து நியமனங்களிலும் வெளிப்படைத் தன்மையும், விதிகளும் கடைப்பிடிப்பதை உறுதி செய்துள்ளோம். ஆக்கிரமிப்பிலிருந்தும், அடைக்கப்பட்டுக் கிடப்பிலிருந்த நீர்நிலைகளை மீட்டெடுத்துள்ளோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் புதுவையை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்.

ஆளுநருக்கென வழங்கப்பட்டுள்ள நிர்வாகப் பொறுப்புகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் சரிவரப் பாதுகாத்துச் செயல்படுத்தியுள்ளோம். புதுவைக்கு நேர்மையான கூட்டு முயற்சி மட்டுமே தேவை எனக் கருதுகிறேன். சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலமாக மாறப் புதுவைக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. இது அரவிந்தரும், முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்த புண்ணிய பூமி” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT