குடியரசு தின விழாவினையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சிறப்பு அதிகாரி மற்றும் ஆணையர் பிரகாஷ், தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் குடியரசு தின விழா இன்று (26.01.2021) சிறப்பாக நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் சிறப்பு அதிகாரி மற்றும் ஆணையர் பிரகாஷ், தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் அரையாண்டில் அதிக சொத்து வரியாக ரூ.2,93,34,205/- செலுத்திய அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஐ.டி.சி. லிமிடெட் (ஐ.டி.சி. கிராண்ட் சோழா) மற்றும் ரூ.2,54,88,770/- செலுத்திய M/s. ட்ரில் இன்ஃபோ பார்க் லிமிடெட், ரூ.1,26,54,715/- செலுத்திய அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட சுகம் வணிஜா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (VR-சென்னை) ஆகியவற்றின் சொத்து உரிமையாளர்களைக் கவுரவித்து ஆணையர் பிரகாஷ் பாராட்டுக் கடிதம் (Letter of Appreciation) வழங்கினார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் காலதாமதமில்லாமல் உரிய காலத்திற்குள் முறையாக சொத்து வரி (Prompt Tax payers) செலுத்தும் சொத்து உரிமையாளர்களான ராயபுரம் மண்டலம், வார்டு-57, கொத்தவால் சாவடியைச் சேர்ந்த விக்ரம் குமார், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-121, மயிலாப்பூரைச் சேர்ந்த ஆர்.பானுமதி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-197, குமாரசாமி நகர் பிரதான சாலையில் உள்ள விஸ்வநாத் டொண்டி ஆகியோரைக் கவுரவித்து ஆணையர் பிரகாஷ் பாராட்டுக் கடிதம் (Letter of Appreciation) வழங்கினார்.
தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைவருக்கும் முன்மாதிரியாக சீரிய முறையில் சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 89 நபர்களைப் பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர்கள் (கல்வி) சங்கர்லால் குமாவத், (சுகாதாரம்) எஸ்.திவ்யதர்ஷினி, (வ (ம) நி) ஜெ.மேகநாத ரெட்டி, வட்டாரத் துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஷ், ஸ்ரீதர், ஆகாஷ், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.