அரியலூர் மாவட்டம் திருமானூரில் டிராக்டர் பேரணியைth தடுத்து நிறுத்த தடுப்புகளைத் தயார் நிலையில் வைத்துள்ள போலீஸார். 
தமிழகம்

அரியலூரில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுப்பு: தடுப்புப் பணியில் காவல்துறை

பெ.பாரதி

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (ஜன.26) தேசியக் கொடியேந்தி அரியலூர் மாவட்டம் திருமானூரில் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

அதேவேளையில், குடியரசு தினமாக இன்று டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி என எந்தப் பேரணிக்கும் அனுமதியில்லை என மாவட்ட எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறை தடுத்தாலும், அறிவிக்கப்பட்டபடி திருமானூரில் காலை 11 மணிக்கு டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும், காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கும் விவசாய சங்கம் சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் விவசாய சங்கங்கள் நேற்று (ஜன.25) அறிவித்தன.

இதனிடையே பேரணியைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு மாவட்ட காவல்துறை திருமானூருக்கு வரும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய தேசிய சாலைகள், திருவெங்கனூர், முடிகொண்டான், கள்ளூர், ஏலாக்குறிச்சி, பாளையப்பாடி உள்ளிட்ட கிராமப்புற சாலைகள் என அனைத்துச் சந்திப்புச் சாலைகளிலும் இரும்பாலான தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்காக அரியலூரிலிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட போலீஸார் திருமானூரில் முகாமிட்டுள்ளனர். பேரணியில் ஈடுபடுவோரைக் கைது செய்து அழைத்துச் செல்ல வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன், டிஎஸ்பி மதன் உள்ளிட்டோரும் திருமானூர் காவல்நிலையத்தில், பேரணி தடுப்புப் பணிகள் குறித்து காவலர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT