சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உட்பட தமிழக காவல் துறை அதிகாரிகள் 20 பேருக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசிய அளவில் தனிச் சிறப்புடன் பணியாற்றும் காவல் துறையினருக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் என ஆண்டுக்கு 2 முறை குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன. காவல் துறைஅதிகாரிகளின் செயல்பாடு, சாதனைகள், நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த 20 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகைசால் பணி விருது
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவைபுதூர் காவல் ஆய்வாளர் மணிகண்டகுமார் ஆகிய 3 பேருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.
பாராட்டத்தக்க பணி விருது
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு, சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. கபில்குமார் சி.சரத்கர்,நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. சந்தோஷ்குமார், சேலம் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஜான்சன், சென்னை பரங்கிமலைஉதவி ஆணையர் ஜீவானந்தம்,ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் முரளி, காஞ்சிபுரம் ஊழல்தடுப்பு, கண்காணிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கலைசெல்வம், பாதுகாப்பு பிரிவு காவல்ஆய்வாளர் கந்தசாமி, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல்9-ம் அணி ஆய்வாளர் சிவசங்கரன், சென்னை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை ஆய்வாளர் சுகன்யா, குற்றப் புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் சீனிவாசன், ஈரோடு சிறப்பு இலக்கு படை உதவி ஆய்வாளர் ஜெ.சுரேஷ்,
மற்றும், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை உதவி ஆய்வாளர் சித்தார்த்தன், மாநில குற்ற ஆவண காப்பகம் கணினி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிசந்திரன், கன்னியாகுமரி குற்றப் புலனாய்வு துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஸ்டீபன், சென்னை குற்றப் புலனாய்வு துறை தலைமை காவலர் கருணாகரன், சென்னை குற்றப் புலனாய்வு துறை தலைமை காவலர் ரமேஷ் ஆகிய 17 பேருக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.
மீட்பு பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு வீரதீர பதக்கம்
மீட்பு பணியின்போது உயிரிழந்த தமிழக தீயணைப்பு வீரருக்கு குடியரசுத் தலைவரின் வீரதீர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையத்தில் கடந்த ஜுலை மாதம் 12-ம் தேதி கிணற்றுக்குள் இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்க தீயணைப்பு வீரர் ராஜ்குமார் உடலில் கயிறு கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தவரை மீட்க, தனது உடலில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்து மயங்கி கிடந்தவரின் உடலில் கட்டி, அவரை மேலே வரச் செய்தார்.
ஆனால், கிணற்றுக்குள் இருந்த விஷவாயு, ராஜ்குமாரை தாக்கியதில் அவர் மரணம் அடைந்தார். ராஜ்குமாரின் செயலை பாராட்டி அவருக்கு 2020-ம் ஆண்டுக்கான குடியரசு தலைவரின் வீரதீர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.