விழுப்புரம் அருகே ஆற்றின் குறுக்கே கடந்த நவம்பரில் திறக்கப்பட்ட தடுப்பணைச் சுவர், சேதமடைந்த விவகாரத்தில் 4 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே தளவானூரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ 25.35 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை கடந்தாண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த சனிக்கிழமை தடுப்பணையில் தடுப்புச் சுவர் சேதம் அடைந்ததால் நீரில் மதகு ஒன்று அடித்து செல்லப்பட்டது.
தரமில்லாமல் கட்டப்பட்டதால்தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, சபா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் தடுப்பணை பகுதியில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே சேதமடைந்த தடுப்பு சுவரைக் கட்டுவதற்கு ரூ.7 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடுப்பணைசுவர் உடைந்தது தொடர்பாக பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவஹர், உதவி செயற்பொறியாளர் சுமதி ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் நேற்று உத்தரவிட்டார். விழுப்புரம் அருகே தளவானூரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் சேதமடைந்த தடுப்புச் சுவர்.