சென்னை காளிகாம்பாள் கோயில் பள்ளியறைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ள வெள்ளிக் கதவுகள். 
தமிழகம்

சென்னை காளிகாம்பாள் கோயில் பள்ளியறைக்கு வெள்ளி கதவுகள் அர்ப்பணிப்பு: ஜனவரி 29-ம் தேதி விழா நடைபெறுகிறது

கே.சுந்தரராமன்

பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை காளிகாம்பாள் கோயில் பள்ளியறைக்கு வெள்ளிக் கதவுகள் அர்ப்பணிக்கப்பட உள்ளன. இதற்கான விழா வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னையில் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்று பாரிமுனை, தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயில் ஆகும். 1639-ம் ஆண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயிலின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்,சென்னியம்மன் குப்பம் என்ற மீனவகிராமப் பகுதியில் இருந்த காளிகாம்பாள் கோயில், வணிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தம்புசெட்டி தெருவுக்கு இடமாற்றம்(1640-ம் ஆண்டு) செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. புகழ்பெற்ற இக்கோயிலுக்கு, 1677-ம் ஆண்டு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து வழிபாடு செய்துள்ளார் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.

இக்கோயிலின் பள்ளியறைக்கு, வரும் 29-ம் தேதி இரவு 8:30 மணிக்கு வெள்ளிக் கதவுகள் அர்ப்பணிக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக தோல் ஏற்றுமதி, இறக்குமதி செய்து வரும் ‘அன்னம் அசோசியேட்ஸ்’ நிறுவனர் எஸ்.சுப்பு சுந்தரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 239 ஆண்டுகளுக்குப் பிறகு, வாராணசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கடந்த 2018-ம் ஆண்டு குடமுழுக்கு செய்ததை மிகப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அதன்பின்னர் இப்போது இந்தக் கோயிலில் உள்ள பள்ளி அறையின் முன்வாயிலை அலங்கரித்து வெள்ளிக் கதவுகள் செய்து அர்ப்பணிக்க உள்ளேன். இதற்கான விழா வரும் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

தலைமை அறங்காவலர் சர்வேஸ்வரனுக்கும் காளிதாஸ் சிவாச்சாரியாருக்கும் இந்நேரத்தில் நன்றிகூறிக் கொள்கிறேன். பக்தர்கள் அனைவரும் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழா தினத்தில் மாலை 3 மணி முதல் மங்கள இசை, சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெறும். இரவு 8:30 மணி அளவில் வெள்ளிக் கதவுகள் அர்ப்பணிக்கும் வைபவம் நடைபெறும்.

SCROLL FOR NEXT