பயங்கர மழை வெள்ளத்துக்கு சென்னை நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கிக் கிடக்க, பெரிய அளவில் மீட்புப் பணிகளை மீனவர்களும் சில தனியார் அமைப்புகளும் மேற்கொண்டன.
சென்னையில் வெள்ளம் சூழ வீடுகளில் சிக்கியோரை மீட்க படகுகளுடன் உதவியவர்கள் காசிமேடு மீனவர்கள். எ
ஏறத்தாழ 8,000 பேரை மீட்க காசிமேடு மீனவருக்குச் சொந்தமான 16 ஃபைபர் படகுகள் பயன்படுத்தப்பட்டன. நாஞ்சில் ரவி என்பவர் உட்பட 45 மீனவர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளான முடிச்சூர், தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் பலரையும் மீட்டுள்ளனர்.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதில் மகிழ்ச்சியடைந்துள்ள காசிமேடு மீனவர்கள், தங்கள் படகுகள் சேதமடைந்துள்ளது பற்றி தற்போது உதவி நாடியுள்ளனர்.
அதாவது, மீட்புப் பணிக்காக லாரிகளில் படகை ஏற்றும்போது படகுகள் சில கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. படகுகளின் அடியில் மிகப்பெரிய ஓட்டைகள் விழுந்துள்ளது. மேலும் வெள்ளப்பகுதிகளில் படகை செலுத்தும் போது துடுப்புகளும் சேதமடைந்தது.
இந்நிலையில், தங்களது படகுகளை பழுது பார்க்க அரசின் உதவியை நாடியுள்ளனர் மீனவர்கள். அரசு தரப்பினர் கேட்டுக் கொண்டதால், இவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்டோருக்குச் சேர்க்க முடியாத அவலம்:
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப்பொருட்களுடன் சில தனியார் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் காத்திருந்தன. ஆனால், உண்மையில் நிவாரணப் பொருட்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுவோர் யார் என்பது பற்றிய விவரங்கள் அவர்களிடத்தில் இல்லை.
அரசு தரப்பினர் இது குறித்த தகவல்களை அளிக்க காலதாமதம் செய்ததால் இவர்களால் நிவாரண உதவிகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
அரசு அதிகாரிகளை இவர்கள் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டனர். உணவு, துணிமணிகள் என்று கொடுக்க நிறைய இருந்தும், நிவாரண முகாம்களின் முகவரிகளை இவர்களால் பெற முடியவில்லை.
பிறகு, புதன்கிழமை மாலைவாக்கில் நகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தலையிட்டு, நிவாரண முகாம்களின் முகவரிகளை ஆன்லைனில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.