தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சென்னை முதல் குமரி வரை நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் அனைத்திந்திய மதுவிலக்குப் பேரவை நடைபயணக் குழு தலைவருமான குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
திருவள்ளுவர், திருக்குறளில் ‘கள்ளுண்ணாமை’ என்ற ஒரு அதிகாரத்தை எழுதினார். அப்படி மதுவிலக்குக்கு பெயர்பெற்ற தமிழகத்தில் இன்றைக்கு நாள்தோறும் குடியால் விளைந்த கேடுகளே செய்தியாக வருகின்றன. ‘மதுவால் வரும் பணத்தைப் பயன்படுத்தி, தேசத்தின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதோ, வேறு பொது நலத்திட்டங்களுக்கோ செலவு செய்வதோ குற்றச் செயலாகும்’ என்று காந்தியடிகள் கூறினார். ஆனால், தமிழகமே இன்று மதுவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்நிலை மாற வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவந்த ராஜாஜி பிறந்த டிசம்பர் 10-ம் தேதி சென்னை பாரிமுனையில் இருந்து நடைபயணம் தொடங்குகிறேன். ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகளின் நினைவு மண்டபம் இருக்கும் கன்னியாகுமரியில் நடைபயணம் முடிவடைகிறது. இந்த நடைபயணத்தில் தொண்டு நிறுவனங்களும், மது ஒழிப்பில் ஈடுபாடு கொண்ட சமூக ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர். மதுவால் விளையும் தீமைகள் பற்றி பிரச்சாரம் செய்துகொண்டே நடைபயணம் செல்லும்.
இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.
பேட்டியின்போது, மதுரை காந்தி அருங்காட்சியக முன்னாள் தலைவர் பாண்டியன், மூத்த காந்தியவாதி தாணுநாதன், அனைத்திந்திய மதுவிலக்கு பேரவை செயற்குழு உறுப்பினர் பி.மாருதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.