தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் முழுமையாக சரி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடந்தாண்டு நவ.16 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற காரணங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி புரட்சித்தலைவி அம்மா பேரவை பொறுப்பு செயலாளர் ஆர்.சதாசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கூவம் ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வழங்கிய மாற்று குடியிருப்பின் மூலம் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்து 188 பேரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த 2 ஆயிரத்து 871 பேரும் தற்போது சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அவர்கள் வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்த பின்னரும் அவர்களது பெயர்கள் இன்னும் பழைய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரையிலும் அவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. இதுபோல சென்னை கூவம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாறி குடிபெயர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்கள் பழைய தொகுதிகளிலேயே உள்ளது. எனவே அவர்களின் பெயர்களை நீக்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ‘கடந்த ஜன.20 அன்று வெளியிடப்பட்ட திருத்த வாக்காளர் பட்டியலின்படி ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், துறைமுகம், அண்ணாநகர் உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து வேறு பகுதிகளுக்கு இடம் மாறியுள்ள 12 ஆயிரத்து 32 வாக்காளர்களின் பெயர்கள் பழைய தொகுதியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து குளறுபடிகளும் முழுமையாக சரி செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.