அமைச்சர்கள் மீதான புகார்கள் பொய் என்றால் விசாரணைக்குத் தடை கேட்டு ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும் எனத் திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் பொதுமக்களிடம் கனிமொழி பேசும்போது, ''திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். அதிமுக ஆட்சி மக்களுக்குப் பயனற்ற ஆட்சி. அதைக் குப்பையைப் போல் தூக்கி எறிய வேண்டும். அதிமுக தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.
முதியோர் உதவித்தொகை வழங்கப் பணமில்லை. ஆனால், ஆயிரம் கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுக்கப் பணம் இருக்கிறது. அதுவும் வெற்றி நடைபோடுகிறது என்று பொய் விளம்பரம் செய்கின்றனர். அவர்களுக்கு வேண்டுமானால் அது வெற்றி நடையாக இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு அல்ல. குடிக்கத் தண்ணீர் இல்லை, வேலை கிடையாது, விலைவாசி ஏறுகிறது, வியாபாரிகள் கடை நடத்த முடியவில்லை.
டெண்டர்கள் அனைத்தையும் அவர்கள் உறவினர்களுக்குத்தான் கொடுக்கின்றனர். ஆனால் உலகளாவிய டெண்டர் என்கின்றனர். அலிபாபா குகை போல், அவர்களது உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கும். கரோனா காலகட்டத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பிளீச்சிங் பவுடர், முகக்கவசம், துடைப்பம் வாங்கியதில் ஊழல் செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். ரேஷன் பொருட்களைக் கூடத் தரமில்லாமல் வழங்குகின்றனர். அதிலும் ஊழல்தான். சிவகங்கைக்கு மருத்துவக் கல்லூரி, மகளிர் கல்லூரி, கூட்டுறவு கல்லூரிகளைக் கொண்டுவந்தது திமுகதான். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தித் தரப்படும்'' என்று கனிமொழி தெரிவித்தார்.
பிறகு வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அமைச்சர்கள் மீதான புகார்களைப் பொய் என்று முதல்வர் கூறுகிறார் என்றால் விசாரணைக்குத் தடை கேட்டு ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும். விசாரணை ஆரம்பித்த பிறகு, புகார்கள் உண்மையா, பொய்யா எனத் தெரியவரும்.
மத்திய அரசு நினைத்தால் இலங்கை அரசை வலியுறுத்தி மீனவர்கள் கொல்லப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியும். உண்மையில் அக்கறை இருந்தால் தமிழக பாஜக, இதை மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
திமுக எதைச் செய்தாலும் விமர்சனம் செய்வதும், பொய்ப் பிரச்சாரம் செய்வதுமே நடக்கிறது. இதனால் வேல் தொடர்பான கேள்விக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை. யார் வேஷம் போடுகிறார்கள் என்பது தேர்தலின்போது தெரியும். ஜல்லிக்கட்டில் வென்றவருக்கு பொய்யான தங்கக்காசை வழங்கியவர்தானே முதல்வர் பழனிசாமி'' என்று கனிமொழி தெரிவித்தார்.
அப்போது மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, அலவாக்கோட்டையில் இயற்கை விவசாயி ராஜேஸ்வரி வைரவனைக் கனிமொழி சந்தித்துப் பாராட்டினார்.