தடுப்பணையில் சேதமடைந்த தடுப்புச் சுவர். 
தமிழகம்

விழுப்புரம் அருகே 3 மாதங்களில் தடுப்பணைச் சுவர் சேதம்; 4 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம்

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் அருகே தடுப்பணைச் சுவர் கட்டப்பட்ட 3 மாதங்களில் சேதமடைந்ததால் 4 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் அருகே தளவானூரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25.35 கோடி மதிப்பில் தடுப்பணைச் சுவர் கட்டப்பட்டுக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, தடுப்பணையில் மற்றொரு கரையோரம் கடலூர் மாவட்டம், எனதிரிமங்கலம் அருகே கட்டப்பட்ட தடுப்புச் சுவர் சேதம் அடைந்ததால் தண்ணீர் மதகு அடித்துச் செல்லப்பட்டது.

தரமில்லாமல் கட்டப்பட்டதால்தான் இந்நிகழ்வு நடைபெற்றது எனக் குற்றம் சாட்டிய திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, சபா ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பொறியாளர் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. இதற்கிடையே சேதமடைந்த தடுப்புச் சுவர் கட்டுவதற்கு ரூ.7 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அசோகன், கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவஹர், உதவிச் செயற்பொறியாளர் சுமதி ஆகிய 4 பேரைத் தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்து, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் இன்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT