தமிழக அரசு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது எனக் கரூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
'தமிழகம் மீட்க, விவசாயம் காக்க, வாங்க ஒரு கை பார்ப்போம்' என்ற பெயரில் கரூர் மாவட்டக் காங்கிரஸ் சார்பில் இன்று (ஜன. 25-ம் தேதி) கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சுற்றுப் பயணம் நடைபெற்றது.
கரூர், ஜவஹர் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த ராகுல் காந்தி அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:
''தமிழக மக்கள் கண்ணியம், சுயமரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் ஆன்மாவைத் தரிசிக்கத் தற்போது திருக்குறளை வாசித்து வருகிறேன். அதில் நேர்மறைச் சிந்தனைகள், சுயமரியாதைக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழிக்கென வரலாறு, உணவு, பழக்க வழக்கங்கள் உள்ளன. தமிழ் வரலாறு, கலாச்சாரம், மொழி ஆகியவை தமிழர்கள் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது. இவை தெரியாததால் பிரதமர் மோடி, தமிழுக்கு உரிய மரியாதையை அளிப்பதில்லை.
தமிழக மக்கள் என் மீது மிகுந்த அன்பு, மரியாதையை வைத்துள்ளனர். என் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளனர். ஆகையால், நானும் தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன்.
தமிழக அரசை பிரதமர் மோடி கட்டுப்படுத்துகிறார். தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான கோடி வருமானம் மத்திய அரசுக்குச் செல்கிறது. மத்திய அரசுக்கு எதிரான ஆட்சி உள்ள மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை, சோதனைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் அதுபோன்று எதுவும் நடப்பதில்லை.
தமிழக அரசு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல் மோடியிடம் உள்ளது. அதனை மாற்றத் தமிழக மக்களுக்கு உதவ இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் நீங்கள் ரிமோட்டின் பேட்டரி அகற்ற முடியும். அதன் பிறகு ரிமோட் செயலிழந்துவிடும். பிரதமர் மோடியை எதிர்ப்பதற்குத் தமிழக முதல்வருக்குத் தைரியம் உள்ளதா? பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு எதிராக முதல்வர் குரல் கொடுத்தாரா?
விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் ஆகிய யாரையும் பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமருக்கு வேண்டிய 5, 6 தொழிலதிபர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே அனைத்துத் திட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன. பாஜகவின் ஆர்எஸ்எஸ்ஸிற்கு எதிரான மனநிலையே தமிழகத்தில் உள்ளது. தமிழர்களின் உணர்வு, ஆன்மா அதனை அனுமதிக்காது.''
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுலின் பேச்சை கரூர் எம்.பி. ஜோதிமணி மொழிபெயர்த்தார்.
ராகுலுடன் செல்ஃபி எடுக்க விரும்பிய சிறுமியைக் கைகொடுத்துத் தூக்கிய ராகுல், சிறுமியின் போனிலேயே செல்ஃபி எடுத்துக் கொடுத்தார். தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, சின்னதாராபுரத்தில் நடந்த நிகழ்வில் பேசிய ராகுல், ''இந்தியப் பகுதியில் ஆயிரம் கிலோ மீட்டரை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் பிரதமர், சீனா என்ற வார்த்தையை உச்சரிக்கவே அஞ்சுகிறார். பாலக்கோட் தாக்குதல் பற்றிய ரகசியங்கள் கசியவிடப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்தப்படவில்லை. விசாரணைக்குப் பிரதமர் மறுக்கிறார். ஏனென்றால் அவர்தான் அத்தகவலை வெளியிட்டார்'' என்றார்.
விவசாயிகளுடன் சந்திப்பு
வாங்கல் அருகே மாரிக்கவுண்டன்பாளையத்தில் நடந்த விவசாயிகள் சந்திப்பில் பங்கேற்கச் சென்ற ராகுலை, நிகழ்வு நடக்கும் இடத்திற்கு கரூர் எம்.பி. செ.ஜோதிமணி மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றார். மாட்டு வண்டியை ஜோதிமணி ஓட்டினார்.
இக்கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு அதற்கு ராகுல் பதிலளித்தார். 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றார். தொடர்ந்து அரவக்குறிச்சி, பள்ளபட்டியில் மக்களைச் சந்தித்துவிட்டு, ராகுல் காந்தி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சென்றார்.