தமிழகம்

அரசியல் நிகழ்வுகளுக்கு அனுமதி; கிராம சபைக் கூட்டத்துக்கு இல்லையா?- திருச்சி ஆட்சியர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவர் கைது

ஜெ.ஞானசேகர்

தமிழ்நாடு முழுவதும் குடியரசு தினத்தில் (நாளை) கிராம சபைக் கூட்டத்தை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரையை போலீஸார் கைது செய்தனர்.

நாட்டில் மே தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது வழக்கமாக உள்ளது. இதனிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகியவை கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டாலும், நேரடியாக நடத்தப்படாமல் வாட்ஸ் அப் செயலி மூலம் மட்டுமே கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களை நேரடியாக நடத்த வேண்டும் என்று விவசாய சங்கங்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குடியரசு தினத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்தும், கிராம சபைக் கூட்டத்தை நடத்த அரசு உத்தரவிட வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை இன்று காஜாமலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட அவர் மறுத்தார். இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, போராட்டம் குறித்து ம.ப.சின்னத்துரை, 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியது:

''கிராமத்துக்குத் தேவையான பல்வேறு அடிப்படைத் தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, பல்வேறு தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மக்களும் தனிப்பட்ட முறையில் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்துத் தீர்வு பெற்று வந்தனர்.

இதனிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத் திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில், பல ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதுபோல், மக்கள் அதிக அளவில் கூடும் பல்வேறு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனால், நிகழாண்டு குடியரசு தினத்தில் கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கிராமங்களின் முன்னேற்றத்துக்காக கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இதுமட்டுமின்றி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு கச்சத்தீவை மீட்டெடுத்து, அங்கு இந்தியக் கடற்படைத் தளத்தை அமைத்து தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசு செய்துள்ள மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்று, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று ம.ப.சின்னத்துரை தெரிவித்தார்.

மேலும், ''போராட்டத்துக்கு வரும் வழியில் தன்னைக் கெட்ட வார்த்தை கூறித் திட்டிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய மண்டல காவல் துறைத் தலைவரிடம் புகார் அளிக்கவுள்ளேன்'' என்றும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT