விழுப்புரம் அருகே சேமடைந்த எனதிரிமங்கலம் - தளவானூர் தடுப்பணையின் தடுப்பு சுவரை சீரமைக்கும் பணியை பொதுப் பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 
தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 3 மாதங்களில் தடுப்பணை சுவர் சேதம்; தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மதகு: திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் தடுப்பணையின் தடுப்பு சுவர் உடைந்து மதகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் - கடலூர் மாவட்டங்களை இணைக்கும் எனதிரிமங்கலம் - தளவானூர் தடுப்பணை, தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கடந்தாண்டு நவம்பரில் திறக்கப்பட்டது. இந்நிலையில், தடுப்பணையின் எனதிரிமங்கலம் பகுதியில், கரைப்பகுதியை ஒட்டிய தடுப்புச் சுவர் நேற்று முன்தினம் சேதமடைந்தது. அதில் இருந்து தண்ணீர் வெள்ளம்போல் கரை புரண்டோடியது. இதில், ஒரு மதகும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

திமுக போராட்டம்

இந்நிலையில், தரமில்லாமல் கட்டப்பட்டதாலேயே இந்த சம்பம் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டி திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, சபா ராஜேந்திரன் உள்ளிட்டோர் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். 4 மணி போராட்டம் தொடர்ந்தது.

கடலூர் துணை ஆட்சியர் ஜெகதீஸ்வரன், கூடுதல் எஸ்பி பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சேதமடைந்த பகுதிகள் விரைந்து சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி எம்எல்ஏ கூறும்போது, “பொதுப்பணித்துறையில் கமிஷனுக்காக தரமில்லாத பணிகள் நடைபெற்று வருகின்றன. உடைந்த தடுப்பணையை சரி செய்யும் பணி கூட இதுவரை தொடங்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

ரூ.7 கோடி மதிப்பீடு

இதுகுறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது: எனதிரிமங்கலம் - தளவானூர் தடுப்பணை உடையவில்லை. சேதமடைந்த தடுப்பு சுவர் கட்ட ரூ.7 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் கட்டப்படும். ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு இருந்தால், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் திமுக நீதிமன்றம் செல்லட்டும். அதனை சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT