தனது நண்பர்களின் பல லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, ஏழைகளின் கடனைத் தள்ளுபடி செய்தாரா என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இதில், ராகுல் காந்தி பேசியதாவது:
கொங்கு நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நகரம் தாராபுரம். நாட்டின் ஆடை உற்பத்தி மையமாகத் திகழும் திருப்பூர், உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர்தான் நாட்டின் அஸ்திவாரமாக இருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை.
அஸ்திவாரம் இல்லாமல் கூரை இருக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அஸ்திவாரம் இல்லாமல், சுவர்களையும் அகற்றிவிட்டு கூரை கட்டுவதாக கூறுகிறார் பிரமதர் மோடி. இந்த அறியாமையை அருகில் இருப்பவர்கள்கூட எடுத்துரைக்கத் தயங்குகின்றனர். ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பது நாட்டின் அஸ்திவாரத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல். தமிழகத்தையும், தமிழர் கலாச்சாரத்தையும் பிரதமர் அவமானப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டின் பொருளாதாரத்தை உலக அளவில் முன்னேறச் செய்தது. லட்சக்கணக்கானோர் வறுமையில் இருந்து மீண்டனர். ஆனால், பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுவிட்டது.
கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், தனது நண்பர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்தார் பிரதமர். ஆனால், எத்தனை ஏழைகளின் கடன் தொகையை அவர் தள்ளுபடி செய்தார் என்பதைக் கூற முடியுமா? புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன உதவி செய்தார்? கடந்த 3 மாதங்களாக நான் பிரதமரைக் கவனித்து வருகிறேன். அவரது வாயிலிருந்து சீனா என்ற வார்த்தைகூட வருவதில்லை. இதுதான் அச்சமின்மைக்கு எடுத்துக்காட்டா? இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
காங்கிரஸ் கட்சி மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், மத்திய முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், காங். மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டப்பேரவை உறுப்பினர் காளிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, ஊத்துக்குளி, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.