சென்னை மாநகரப் பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள் வது தொடர்பாக, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாநக ராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி, ஆணையாளர் விக்ரம் கபூர் மற்றும் சென்னை மாநகரப் பகுதிக்கு உட்பட்ட அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் அ.சவுந்தரராஜன், க.பீம்ராவ் ஆகியோர் பங்கேற்றனர். திமுக மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. எம்பிக்கள் ஜெயவர்தன், ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சி முழுவதும் நிவா ரணப் பணிகளை மேற்கொள்ள 200 வார்டுகளிலும் தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் மழைநீர் மற்றும் குப்பை தேங்கியுள்ளதோ அங் கெல்லாம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ அ.சவுந்தரராஜன் கூறும்போது, “இந்த கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் தொடர் பான விவரங்கள் தெரிவிக் கப்பட்டன. வில்லிவாக்கம் சிட்கோ நகர், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் என சில இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை. அதை மாநகராட்சி நிர்வாகமும் ஒப்புக்கொண்டுள்ளது.
மழைநீர் வடிந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதை பொது மக்களால் சகித்துக்கொள்ள முடியாது. சென்னையில் கழிவு நீரை அகற்றும் பணி பலவீனமாக உள்ளது. கழிவுநீர் உந்து நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.
கனமழையால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி மருத்துவ மனையில் உள் நோயாளியாக சேர்ந்தவர்களின் விவரங்களை மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தது. காய்ச்சல் கண்ட மற்றவர்களின் விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.
வெள்ள நீர் வடிவதற்கான ஏற்பாடுகள் சுருங்கியுள்ளது. சென்னையில் மழைநீர் வடிகாலுக் கான அனைத்து ஏற்பாடுகளும் உள்ள நிலையில், வடிகால் களை தூர் வாராமலும், அடைப்பு களை சீர்செய்யாமலும், ஆக்கிர மிப்புகளை அகற்றாமலும் இருந்த தால்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அடுத்த மழையின்போது, இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூட்டத்தில் அறிவுறுத்தி யிருக்கிறோம் என்றார்.