திருக்காலிமேட்டில் மஞ்சள்நீர் கால்வாயின் கழிவுநீர் கலந்து மாசடைந்துள்ள சின்ன வேப்பங்குளம். 
தமிழகம்

திருக்காலிமேடு பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: கழிவுகளை அகற்றி நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

திருக்காலிமேடு பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தில் நீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதப்பதால், குளத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பெரு நகராட்சியின் 27-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சின்ன வேப்பங்குளம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குளமாக விளங்கிய சின்ன வேப்பங்குளம், தற்போது பராமரிப்பின்றி குப்பை மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் காரணமாக அசுத்தமடைந்துள்ளது.

இந்நிலையில், மஞ்சள் நீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர், குளத்தில் கலந்து நீர் மாசடைந்துள்ளதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, செத்து மிதக்கும் மீன்கள் மற்றும் கழிவுகளை அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள், கரைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, "சின்ன வேப்பங்குளத்தில் அடிக்கடி மஞ்சள்நீர் கால்வாயின் கழிவுநீர் கலந்து மீன்கள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இக்குளத்தில் உபரிநீர் வெளியேறுவதற்கான கால்வாய் இல்லை.குளமும் நிறைந்து வழிந்ததில்லை.

ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குளம் மற்றும் மஞ்சள்நீர் கால்வாய் இணைக்கப்பட்டது. உபரிநீர் வெளியேறுவதற்காக இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், மஞ்சள்நீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர் நன்னீர் குளத்தில் கலந்து வருகிறது. இதனால், குளத்தின் நீர் முழுவதும் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட கால்வாயை இடித்து அகற்ற வேண்டும். மேலும், சின்ன வேப்பங்குளத்தை தூர்வாரி சீரமைக்க கடந்த ஆண்டுநிதி ஒதுக்கப்பட்டது. ஆனால்,மழைக்காலத்தை காரணமாககூறி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பெரிய கரைகளை கொண்ட குளத்தை தூர்வாரி, கரைகளை சீரமைத்து நடைபாதை அமைத்தால் மக்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வர்" என்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறும்போது, "திருக்காலிமேடு குளத்தில் இறந்து மிதக்கும் மீன்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குளத்தின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT