2015-ம் ஆண்டு பேரிடர் நிவாரணத் தொகை வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதை வாக்காக மாற்ற அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்தகனமழையால் சென்னை புறநகர்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.5,000 பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. இந்த நிதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 மற்றும் 3 பேருக்கு வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து 2015-ம் ஆண்டுநிவாரணம் வழங்கிய பட்டியலில்வீடுவீடாகச் சென்று வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வை அதிமுகவினர் வாக்காக மாற்றதிட்டமிட்டு வருவதாகதிமுகவினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 2015-ம் ஆண்டு மழையின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது அந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக வருவாய்த் துறையினர் நிவாரணம் வழங்கிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது ஆளும் அதிமுகவின் சதி என்றே நாங்கள் கருதுகிறோம்.
திமுகவுக்கு மக்கள் ஆதரவு
தற்போது தமிழகத்தில் ஆட்சிஅமைக்க மக்கள் பெருவாரியாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திமுக பிரச்சாரம்மேற்கொள்ளும் இடங்களில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைக் கூறி வருகின்றனர். மேலும் கிராம சபை கூட்டம் மக்கள் மத்தியில்நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதைப் பொறுத்துக் கொள்ளாமல் அதிமுகவினர் பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகவே அதிமுக அரசு காலத்தில் நிவாரணம் கொடுக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்தி தற்போது பொங்கல் பரிசு ரூ. 2,500 வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கூறி அதை வாக்காக மாற்ற முயற்சி செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, "2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் தாம்பரம் கோட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் ஆகிய வட்டங்களில் 23 ஆயிரம் பேருக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மேலும் வங்கி கணக்குகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தவறுகள் நடந்திருக்கும்பட்சத்தில் பணம் திரும்பப் பெறப்படும். இதில் திமுகவினர் குறிப்பிடும் குற்றச்சாட்டு உண்மை இல்லை. நிவாரணத் தொகை வழங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது" என்றார்.