தமிழகம்

மக்கள் நலக் கூட்டணியில் இணைய விஜயகாந்த், ஜி.கே.வாசனுக்கு அழைப்பு: வைகோ தகவல்

செய்திப்பிரிவு

மக்கள் நலக் கூட்டணியில் இணைய விஜயகாந்த், ஜி.கே.வாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

இக்கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் இதுவரை தொகுதி உடன்பாட்டு அடிப்படையில்தான் கூட்டணிகள் அமைந்தன. ஆனால், மக்கள் நலக் கூட்டணி, சமூக, அரசியல், பொருளாதாரம் ஆகிய வற்றின் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட குறைந்தபட்ச செயல்திட் டத்தை அறிவித்து, அதனடிப்படை யில் தேர்தலை சந்திக்கவுள்ளது.

தற்போது அதிமுக, திமுக கட்சி களுக்கு மக்களிடத்தில் ஆதரவு அலை வீசவில்லை. தமிழகத்தை பாழ்படுத்திய ஊழல்களைச் செய்வதில், அதிமுக, திமுக கட்சிகள் சம அளவில் உள்ளன. ஊழல் கட்சிகளுக்கு மக்கள் உரிய தண்டனை அளிப்பர். ஆனால், எங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது. வரும் தேர்தலில் ஊழல் எதிர்ப்பே எங்களது முக்கிய பிரச்சாரமாக இருக்கும்.

எந்தக் கட்சியையும் சாராத 65 சதவீத இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு, மக்கள் நலக் கூட்டணி யின் மீது பிடிப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வோம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் வாசன் ஆகியோரை கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். அதிமுக, திமுக அணிகளைத் தவிர வேறு அணி வெற்றி பெறப்போவதில்லை என்ற வாதம், வரும் தேர்தலில் தோற்றுப்போகும். நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் நீர்நிலைகளை தூர் வாராததாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும் தற்போதைய மழையின்போது அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கை களிலும், நிவா ரணப் பணிகளிலும் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதல்கட்டமாக ரூ.5,000 வழங்க வேண்டும். ஆய்வுக்குப் பின்னர் உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

தமிழக அரசு கேட்கும் நிவராண நிதியை, மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். அந்த நிதியில் ஊழல் நடைபெறாமல் இருக்கும் வகையில், மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றார் வைகோ.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் கூறும்போது, “மழை, வெள்ளத்தால் முழுமையாக இடிந்த வீடுகளுக்கு ரூ.5,000 வழங்குவது போதாது. குறைந்தபட்சம் ரூ.25,000 வழங்க வேண்டும்” என்றார்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT