தமிழகம்

மழை பாதிப்பு; பார்வையிட வராத தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு: வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

அ.முன்னடியான்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு வராததால், 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த விவசாயிகள், அங்கிருந்த வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அடுத்த திருக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கொடாத்தூர், கைக்கிலப்பட்டு, மண்ணாடிப்பட்டு, காட்டேரிக்குப்பம், சோரப்பட்டு, சுத்துக்கேணி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெல் பருவத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பொன்னி, பொன்மணி உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர்.

நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நிவர், புரெவி புயல்கள் மற்றும் தொடர் கனமழையின் காரணமாக அனைத்து நெற்பயிர்களும் நிலத்தில் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி அழுகியது. மேலும் நிலத்தில் விழுந்த நெல் மணிகள் அனைத்தும் வயலிலேயே முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொடாத்துாரில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை புதுச்சேரிக்கு வந்துள்ள தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையக்குழுவினர், புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் ஆகியோர் இன்று(ஜன 24) பார்வையிட வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் தேசிய பேரிடர் குழுவினரை விவசாயிகள் சந்தித்து குறைகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் காலையிலேயே அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளும் அங்கு குவிந்தனர்.

ஆனால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் கொடாத்தூர் கிராமத்துக்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இச்செய்தியை வேளாண் அதிகாரிகள் விசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த விவசாயிகள் ஆத்திரமடைந்து அங்கு இருந்த வேளாண் துறை இணை இயக்குநர் வேணுகோபால் ராவ், வேளாண் அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டோரை திடீரென முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிடாமல்,

விவசாயிகளுக்கு எப்படி நிவாரணம் வழங்குவார்கள் எனவும் கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிலமணி நேரத்தில் சாமதானமடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT