சந்தையில் நிராகரிக்கப்பட்ட கனிந்த வாழைப் பழங்களை உலர்த்தும் தொழில்நுட்பத்தை திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் பழுத்த வாழைப் பழங்களை உலர்த்தும் தொழில் நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது கனிந்த வாழைப்பழங்களை பயன்படுத்துவதற்கு ஒரு சாத்திய மான தீர்வாக அமைந்துள்ளது.
சந்தையால் நிராகரிக்கப்பட்ட கனிந்த வாழைப்பழங்களை செலவு குறைந்த வாழைப்பழப் பொடிகளாக மதிப்புக் கூட்டும் முறை, சிறு மூலதன உணர்திறன் கொண்ட உணவுத் தொழில்களை மேற்கொள்பவர்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம். பழுத்த வாழைப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் உள்ளன. அவை மனித ஆரோக்கி யத்தில் ஃப்ரீ-பயோடிக் நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண் டுள்ளன. மேலும் உலர்த்தப்பட்ட பழுத்த வாழைப்பழ பொடிகளை உணவு தயாரிப்பில் செயல் பாட்டு மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.
வழக்கமாக அடர்த்தியான அமைப்பு மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக பொது வாக வாழைப்பழக் கூழ் உலர நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாழைக் கூழை மிகவும் நுண்ணியதாக ஆக்கி விரைவாக உலர உதவும். பழுத்த வாழைப்பழ பொடியை, பேக்கரி பொருட்களில் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு டன் சேர்த்து பயன்படுத்தலாம். இனிப்பு தயிர்(யோகர்ட்), ஐஸ் கிரீம், பழ மிட்டாய் மற்றும் பழ சாக்லெட் தயாரிக்க சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுத்தலாம்.
மேலும், திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் துளசி விதையுடன் சர்க்கரை இல்லாத வாழைப்பழச் சாறு, கலோரி குறைவான வாழைத் தண்டு சாறு மற்றும் வாழைத் தண்டு, தோல் மற்றும் பூ ஆகியவற்றிலிருந்து குறைந்த சோடியம் உள்ள ஊறுகாய் ஆகியவற்றை தயாரிக் கும் தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.