தமிழகம்

ராமநாதபுரத்தில் வரலாறு காணாத மழைபொழிவு: இரண்டாம் போக சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுரை

கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண் டுகளுக்குப் பிறகு ஜனவரியில் வர லாறு காணாத மழை பெய்ததால், அறு வடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் வீணாகின. அதனால் இரண்டாம் போக சாகுபடி செய்ய வேளாண்மைத் துறை அறிவுரை வழங்கி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆண்டு சராசரி (ஜனவரி முதல் டிசம்பர் வரை) மழையளவு 827 மி.மீ. 2020-ம் ஆண்டில் சராசரியைவிட கூடுதலாக 18 மி.மீ (மொத்தம் 845 மி.மீ.) மழை பதிவானது. இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 135 மி.மீ. மழை பெய்ய வேண்டும், ஆனால் 177 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோல் வடகிழக்குப் பருவமழை காலத்தில் 501 மி.மீ. பெய்ய வேண்டும், ஆனால் 583 மி.மீ. பெய்துள்ளது. 2020-ம் ஆண்டில் வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்ததால், நெல், மிளகாய், பருத்தி, நிலக்கடலை, பயறுவகை பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்தன.

வழக்கமாக, ஜனவரியில் 48.5 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இம்மாதம் இதுவரை 247 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வரலாறு காணாத மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகின. தற்போது விவசாயிகள் நிவாரணம், பயிர் காப்பீடு கோரி வருகின்றனர். ஜனவரியில் 30 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கண்மாய், ஊருணிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன.

மாவட்டத்தில் 3.34 லட்சம் ஏக்கர் நெல் பயிர், 50,000 ஏக்கர் மிளகாய், 25,000 ஏக்கர் சிறுதானியங்கள், 10,000 ஏக்கர் பயறு வகைகள், 6,000 ஏக்கர் எண்ணெய் வித்துகள் பயிரிடப்பட்டுள்ளன. இவற் றில் 70 சதவீதத்துக்கு மேல் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் போகம் சாகுபடி
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் க.குணபாலன் கூறியதாவது, முதல்போக சாகுபடி மழையால் வீணாகி விட்டதால் விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடி செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி வருகிறார்.

இந்தாண்டு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண் மாய்களில் நீர் நிரம்பியுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யலாம். மற்ற கண்மாய் பாசன விவசாயிகளும் குறைந்த நாட்களில் மகசூல் தரும் நெல் ரகங்கள் மற்றும் பருத்தி, சிறுதானியங்கள், எள் உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களை இரண்டாம் போக சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

SCROLL FOR NEXT