திருப்புல்லாணி அருகே கட்டையன் பேரன்வளைவு கிராமத்தில் நிலக்கடலை வயலில் தேங்கியுள்ள மழை நீர். 
தமிழகம்

திருப்புல்லாணியில் நீரில் மூழ்கிய 500 ஏக்கர் பயிர்கள்: கடலை, எள் பயிரிட்ட விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

திருப்புல்லாணி ஒன்றியத்தில் 500 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகின. ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.34 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிரிடப் பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் ஜனவரி 6 முதல் 16-ம் தேதி வரை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது.

இதனால் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிரும், 50,000 ஏக்கருக்கும் மேல் மிளகாய்ச் செடிகளும் நீரில் மூழ்கி வீணாகின. இதேபோல் மக்காச்சோளம், சிறு தானியங்கள், பயறுவகை பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் நிவாரணம் கோரி தினமும் ஆட்சியர் அலுவல கத்துக்கு வருகின்றனர். ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்புல்லாணி ஒன்றியம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலக்கடலை, எள், தட்டை பயறு உள்ளிட்ட பயறு வகைகள் மழை நின்று 2 நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறிப்பாக திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தினைக்குளம், களி மண்குண்டு, வண்ணாங்குண்டு ஊராட்சிகளைச் சேர்ந்த கட்டையன் பேரன்வளைவு, மொங்கான் வலசை, மொத்தி வலசை, களிமங்குண்டு உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு மேல் நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயறுவகை பயிர்கள், மகசூல் காலம் வரும் நேரத்தில் மழை நீரில் மூழ்கியுள்ளன.

கட்டையன் பேரன் வளைவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்து லெட்சுமி(53) கூறியதாவது:

இருபது ஆண்டுகளில் இல்லாத மழை இந்தாண்டு பெய்துள்ளது. இதுபோன்று மழைநீர் இதுவரை வயல்களில் தேங்கியதில்லை. மழை நின்று 2 நாட்கள்ஆகியும் நிலக்கடலை, எள், தட்டைப்பயறு உள்ளிட்ட வயல்களில் உள்ள தண்ணீர் வடியாமல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT