மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, ‘‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரண மில்லை’’ என்ற தலைப்பில், அவரது அண்ணன் மகள் டாக்டர் ஏபிஜேஎம். நசீமா மரைக்காயர் மற்றும் பிரபல விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஒய்.எஸ். ராஜன் இணைந்து எழுதி யுள்ளனர். இந்தப் புத்தகத்தை சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கடந்த வாரம் வெளியிட்டார்.
அப்போது குடியரசு துணைத் தலை வர் பேசியதாவது:
இளைஞர்களின் மனதைத் தூண் டுவதில் கலாம் ஆர்வமாக இருந்தார். மாணவர்களுடன் உரையாட, அவர் எப்போதும் பள்ளிகளுக்குச் சென்றார். அவர் தனது பேச்சு மற்றும் உற்சாகமான புன்னகை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சமூக நலன் மற்றும் வளர்ச்சிக்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவர் உறுதியான நம்பிக்கை வைத் திருந்தார்.
விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில், தற்சார்பு இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருமை உண்மையில் கலா மையே சேரும். கலாம் விட்டுச் சென்ற நம்பிக்கை என்ற பாரம்பரியம்தான், இன்று நமது விஞ்ஞானிகள் கரோனா தடுப்பூசி உருவாக்கத் தூண்டியுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியைக் கூட நாம் சுமாராகத் தொடங்கி, இன்று பிபிஇ உடைகள், என் 95 முகக் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். கோவிட்-19 தடுப்பூசிக்காக அயராது உழைத்த விஞ்ஞானிகளுக்கும், அரசுக் கும் பாராட்டுகள்.
வெல்ல முடியாத உணர்வு, துரதிருஷ்ட காலத்திலும் தளராத மனப்பான்மை ஆகியவற்றுக்காக டாக்டர் கலாம், எப்போதும் நினைவு கூறப்படுவார். ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையுடன் அவர் வாழ்ந்தார். இவ்வாறு அவர் பேசினார். நசீமா மரைக்காயர் கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயரின் மகள். ஒய். எஸ். ராஜன் கலாமுடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றி சக விஞ்ஞானியாக மட்டுமின்றி நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர். இவர்கள் இருவரும், கலாமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், மற்றவர்கள் கலாமைப் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து, இந்தப் புத்தகம் வேறுபட்டு உள்ளது.
சாதாரண மீனவக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலை வராக உயர்ந்ததற்கு எத்தனையோ ஆசிரியர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இப்புத்தகம் விளக்குகிறது. கலாமின் விருப்ப உணவு, மனதை வருடும் இசை, இயற்கையை நேசிப்பது போன்ற காரியங்களில் அலாதி பிரியம் கொண்டிருக்கிறார். அவர் திருக்குர் ஆன், திருக்குறள், பாரதியார் பாடல்கள் ஆகியவற்றை வாசித்து, நேசித்து வாழ்வியலாக மாற்றிக் கொண்டார் என்பதையும் இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்நூலில் கலாமின் முன்னோர்களின் வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் பாரம்பரியம் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் மாணவப் பருவத்தில் கலாம் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம் பவங்கள், நுணுக்கமாக கலாமின் அண் ணன் மகள் நசீமா மரைக்காயரால் விவரிக்கப்பட்டுள்ளது. கலாமை எது சிறந்த நிர்வாகியாகவும், நிபுணத்துவம் வாய்ந்த மனிதராகவும், விண்வெளித் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியாகவும் விளங்கச் செய்தது என்பதை ஒய்.எஸ். ராஜன் விளக்கி உள்ளார்.