பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேனி இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு மாற்றாக துணிப்பைகளை எடுத்துச் செல்வதில் பொதுமக்களிடையே ஆர்வம் இல்லாத நிலை உள்ளது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரீடோ தொண்டு நிறுவனம் சார்பில் துணிப்பை குறித்த விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகுராஜா, திட்ட மேலாளர் பிரசாந்த், தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜயராஜா ஆகியோர் பேருந்து நிலையம், உழவர் சந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று துணிப்பையின் முக்கியத்துவத்தை விளக்கி வருகின்றனர்.
பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி துணிப்பையை பயன்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜயராஜா கூறுகையில், இதில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் படம், அவரது கருத்துகள், பனை மர படங்கள், உழவு, மண்சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள், பாரதியார் கவிதைகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இலவசமாக கொடுத்தால் இதன் மதிப்பு தெரியாது என்பதால் மிக குறைந்த ரூபாய் பெற்றுக் கொள்கிறோம். இயலாதவர்களுக்கு இலவசமாகவும் வழங்குகிறோம். கர்ச்சீப் போல எப்போதும் மடித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் நேரங்களில் பொருட்களை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வலியுறுத்தி வருகிறோம் என்றார்.