தமிழகம்

அதிமுகவின் முன்னாள், இந்நாள் அமைச்சர்களை எதிர்கொள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் வலுவான வேட்பாளர்களை தேடும் திமுக 

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மற்றும் நத்தம் தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்நாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனை எதிர்த்து நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது.நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலில், தற்போது அமைச்சராக உள்ள திண்டுக்கல் சி.சீனிவாசன் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

இவரை எதிர்த்து போட்டியிட திமுக கூட்டணி சார்பில் வலுவான, தொகுதியில் பிரபலமான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. திமுக சார்பில் பலர் போட்டியிட ஆர்வம் காட்டும் நிலையில் கட்சித் தலைமை தொகுதி மக்களுக்கு தெரிந்த மற்றும் பணபலமிக்க வேட்பாளரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நாள் அமைச்சர்

தமிழகத்தில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கண்டிப்பாக திமுகதான் போட்டியிட வேண்டும் என்ற நிலையிலும் அக்கட்சி உறுதியாக உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் ஆளுங்கட்சியினரின் படைபலம் மற்றும் பணபலத்தை சமாளித்து வெற்றி காணலாம் என எண்ணுகிறது. இதனால் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை எதிர்த்து வலுவான வேட்பாளர் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு வேளை கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தால் திமுக போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்பட்டால், அதிலும் மக்களிடம் ஏற்கெனவே பிரபலமான நபரை வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்

தொடர்ந்து நான்கு முறை நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சர் பதவியும் வகித்தவர் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன். கடந்த 2016 தேர்தலில் இவருக்கு நத்தம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் ஆத்தூர் தொகுதியில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியை தோற்கடிக்க வியூகம் வகுத்து கட்சித்தலைமை அவரை ஆத்தூர் தொகுதியில் போட்டியிடச் செய்தது. இதில் அவர் தோல்வியுற்றார். இதனால் திண்டுக்கல் சட்டப் பேரவை தொகுதியில் போட்டிட்டு வெற்றிபெற்ற திண்டுக்கல் சி.சீனிவாசன் வனத்துறை அமைச் சரானார்.

நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்த முறை முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் மீண்டும் நத்தம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதே மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை இவர் நத்தம் தொகுதியில் போட்டியிடாததால் திமுக சார்பில் போட்டியிட்ட ஆண்டி அம்பலம் வெற்றி பெற்றார். நத்தம் தொகுதி உருவானதில் இருந்து வெற்றி பெறாத திமுக, 39 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதியை கைப்பற்றியதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். இதை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுகவினரும் தற்போதே தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்தமுறை அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை விட இந்த முறை களம் இறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் படை பலம், பண பலம் என அனைத்திலும் வலுவான வேட்பாளர் என்பதால் இவரை வெற்றிகண்டு மீண்டும் தொகுதியை தக்கவைக்க திமுகவினர் வலுவான வேட்பாளரை தேடி வருகின்றனர். இதில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளிட்ட ஆண்டி அம்பலம் உள்ளிட்ட சிலர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற திமுகவில் உள்ள மற்ற பிரபலங்களும் முயற்சித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT