நாடு முழுவதும் 32-வது சாலை பாதுகாப்பு விழா கடந்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை நடத்தப்படுகிறது. இந்தியாவின் சாலைகளை முற்றிலும் விபத்து இல்லாத மண்டலமாக மாற்றுவதே இந்த சாலை பாதுகாப்பு விழாவின் இலக்கு. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கு இவ்வார விழாவில் பல்வேறு முறைகள் செயல்படுத்தப்படும். மோட்டார் வாகனத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களைக் கொண்டு பேரணி நடத்தி சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
வாகன இயக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பதாகை ஏந்தி, கோஷமிட்டுச் செல்வதோடு, சில இடங்களில் வித்தியாசமான விழிப்புணர்வு என்ற பெயரில் நாட்டுப் புறக் கலைஞர்களைக் கொண்டு, எமதர்மன் வேடமணிந்து ஊர்வலம் செல்வது, துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பதோடு இவற்றோடு அவர்களது கடமை முடிந்து விடுகிறது.
அதேநேரத்தில் சாலை பாதுகாப்பு கடைபிடித்தல் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மறுபுறம் போக்கு வரத்துப் போலீஸாரும், சட்டம் ஒழுங்கு காவல் துறையினரும் கையடக்க பணப் பற்றுச் சீட்டு கருவியுடன், சாலைகளில் நின்று கொண்டு, தலைக்கவசம், முகக் கவசம், சீட் பெல்ட் அணிந்து வந்திருந்தாலும், அவர்களது வாகனங்களை நிறுத்தி ஏதேனும் ஒரு குறைபாட்டை சுட்டிக்காட்டி அதற்கு தண்டம் விதித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சாலை பயனீட்டாளர் சங்கத் தலைவர் பிராகஷ் கூறுகையில், “சாலை பாதுகாப்பு என்பதற்கு பதிலாக பாதுகாப்பான சாலை என கடைபிடிக்கவேண்டும். சாலை பாதுகாப்பு விழாவின் போது, 2019-ம் ஆண்டின் மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது. அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து மக்களுக்குச் சொல்ல அல்லது அவர்களிடம் கொண்டுச் செல்ல பல அமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் அவசர அழைப்பு எண்களைக் கொண்ட பலகைகளை பல்வேறு இடங்களில் வைக்கப்பட வேண்டும். முக்கியமாக நெடுஞ்சாலைத் துறையினரைக் கொண்டு சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்க வேண்டும், பராமரிப்பில்லாத சாலைகளை கண்டறிந்து, அப்பகுதி பொறியாளருக்கு தண்டம் விதிக்கும் வகையில் சாலை பாதுகாப்பு கடைபிடிக்க வேண்டும்” என்கிறார்.