விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை 400 மீட்டர் நீளமும் 3.1 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் இருபுறமும் பக்கத்திற்கு 3 மணற்போக்கிகள் வீதம் என6 மணற்போக்கிகளை கொண்டது. இந்த அணைக்கட்டு விநாடிக்கு 1,46,215 கன அடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. இருபுறங்களிலும் அமையப் பெற்றுள்ள மணற்போக் கிகள் மூலம் விநாடிக்கு 5,105 கன அடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது.
இந்த தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரால் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தளவானூர், கொங்கரக்கொண்டான், திருப்பாச்சனூர், வெளியம் பாக்கம், சித்தாத்தூர் திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட என திரிமங்கலம், காவனூர், உளுத்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய பகுதியில் 87 திறந்தவெளிக் கிணறுகள், 2,114,14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் எனதிரி மங்கலம் கிராமத்தில் உள்ள தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறுவதாக வீடியோ ஒன்று சமூகவலை தளங் களில் வைரலானது. இது தொடர்பாக கிராம மக்களிடம் கேட்டபோது, “கட்டப்பட்ட தடுப்பணையில் மண் அரிப்பு ஏற்பட்டு சிமெண்ட் தடுப்பே நகர்ந்துள்ளது. இது குறித்து ஆட்சியர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் ”என்றனர்.
மேலும் இது குறித்து பொதுப் பணித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, தடுப்பணை உறுதியாக உள்ளது. “தற்போது கதவணையை திறந்ததால் புதிய மண் அடித்துக் கொண்டு வெளியேறுகிறது. இதை நாங்கள் ‘பைப்பிங் ஆக்ஷன்’( Piping action) என்போம். இது எதிர்பார்த்த ஒன்றுதான். இதனால் அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” என்றனர்.