மத்திய அரசின் ‘நவ ரத்னா’ அந்தஸ்து பெற்று, லாபத்தில் இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனம் என்எல்சி இந்தியா நிறுவனம். இந்த நிறுவனத்தில் 8 ஆயிரம் நிரந்தர பணியாளர்களும், 5 ஆயிரம் அலுவலர்களும், பொறியாளர்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோருக்கு என்எல்சி மறைமுக வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கீகரிகப்பட்ட தொழிற்சங்கத்தினை தேர்வு செய்ய 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்தத் தேர்தலில், மொத்த தொழிலாளர்களிடம் 51 சத வீத வாக்குகளை பெறும் சங்கமே முதன்மை சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கமாகும். எந்தச் சங்கத்திற்கும் 51 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை எனில் அதிக வாக்குகள் பெற்ற சங்கம் முதன்மை சங்கம், அதற்கு அடுத்தப்படியாக வாக்குகள் பெற்ற சங்கம் இரண்டாம் நிலை சங்கம் என இரு சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.
கடந்த 2000-ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கத்தினை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அப்போது நடந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முதன்மை சங்கமாக தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து 2004-ம் ஆண்டும் தொமுச வெற்றி பெற்றது. அதன் பின் 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொமுச, பாட்டாளி தொழிலாளர்கள் சங்கம் ஆகிய இரு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டன.
2012-ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பில் தொமுச, அதிமுகவின் அண்ணா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கமும் வெற்றி பெற்றன. 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிஐடியூ, தொமுச ஆகிய இரண்டு சங்கங்களும் தேர்வு செய்யப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், கரோனா நோய் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 4-ம் தேதி வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது.
இதனால் நெய்வேலி நகரமே கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உள்ள தொமுச, அண்ணா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியு, பாட்டாளி தொழிலாளர்கள் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி உட்பட 13 தொழிற்சங்கள் களத்தில் இருக்கின்றன. இதற்கிடையில், திராவிடர் தொழிலாளர் ஊழியர் சங்கம் வாக்கெடுப்பில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, தொழிலாளர் நல ஆணையர் அனைத்து சங்கத்தையும் கருத்து கேட்டு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் உதவி முதன்மை தொழிலாளர் ஆணையர் தொழிற்சங்கங்களை அழைத்துக் கருத்துக்களை கேட்டார். இதில், ஒரு சில சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து மீண்டும் நெய்வேலியில் அனைத்து தொழிற்சங்கங்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யலாம் எனக் கூறி தேர்தலை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார். இதனால் தொழிற்சங்கத் தேர்தல் நடப்பது மேலும் தாமதமாகியுள்ளது.