தமிழகம்

குறிக்கப்பட்ட தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சுகாதார பணியாளருக்கு மீண்டும் முன்னுரிமை கிடைக்காது: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

குறிக்கப்பட்ட தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சுகாதாரப் பணியாளர்களுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்கப்படாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசிபோடும் பணி கடந்த 16-ம் தேதிதொடங்கியது. புனே சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ மற்றும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்துகளை கொண்டு தடுப்பூசி போடப்படுகிறது. நாடுமுழுவதும் முதல்கட்டமாக 3 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 160 மையங்களில் ‘கோவிஷீல்டு’, 6 மையங்களில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 4.5 லட்சம் சுகாதாரப் பணியாளர்களின் விவரங்கள் ‘கோவின்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள பலர் தயக்கம் காட்டியதால், நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பிரபல மருத்துவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். இதுவரை 60 ஆயிரம் பேர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் சிலரிடம் தயக்கம் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் விவரங்கள் ‘கோவின்’செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் எந்த தேதியில், எந்த நேரத்தில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படுகிறது. அந்த தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு, மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படாது. அவர்களின் பெயர்கள் பயனாளர்கள் பட்டியலில் கடைசி இடத்துக்குச் சென்றுவிடும்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடிவடைந்தது. அடுத்ததாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிதொடங்கும். முன்களப் பணியாளர்களை கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது. இதுவரை 1.10 லட்சம் காவல் துறையினர், 70 ஆயிரம் உள்ளாட்சி ஊழியர்கள் உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT