தமிழகம்

தொழில் துறையில் கருணை அடிப்படையில் 12 பேருக்கு நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்

செய்திப்பிரிவு

தொழில் முதலீட்டுக் கழக பணியாளர்களின் வாரிசுகள் 12 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இசை, கவின் கலைகள் தொடர்பான நூலையும் அவர் வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழில் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் மறைந்த 12 பணியாளர்களின் வாரிசுகளுக்கு அவர்களது தகுதிக்கேற்ப, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை ஈட்டிய நிகர லாபத்தில் தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையாக 2017-18 ஆண்டுக்கு ரூ.1.87 கோடி, 2018-19 ஆண்டுக்கு ரூ.53 லட்சம் என ரூ.2.40 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் தொழில் துறை அமைச்சர்எம்.சி.சம்பத் வழங்கினார்.

நூல் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலைக்கழகம் சார்பில் தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்ட ‘இசை மற்றும் கவின் கலைகளின் வளர்ச்சி - ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற நூலை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். தென்னிந்திய இசை தொடர்பான நூல்களை எழுதிய வே.ராம் ஆங்கிலத்திலும், அதன் தமிழாக்கத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தியும் எழுதியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், செயலர்கள் விக்ரம் கபூர், முருகானந்தம், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், சர்க்கரைத் துறை ஆணையர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT