ரமேஷ் பாபு 
தமிழகம்

10 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விரக்தி: ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

செய்திப்பிரிவு

நாகையில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த விவசாயி நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

நாகை சட்டையப்பர் மேலவீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு(58). இவருக்கு கீழையூர் ஒன்றியம் திருக்குவளையை அடுத்த மோகனம்பாள்புரம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், அங்கு 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வந்தார்.

விவசாய கடன்

இந்த 10 ஏக்கர் நிலத்திலும் சம்பா, தாளடி பயிர்களை சாகுபடி செய்திருந்த ரமேஷ்பாபு, அதற்காக வடக்கு பனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், வலிவலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலும் விவசாயக் கடன் வாங்கியிருந்தார்.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக இந்தப் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதைப் பார்த்த ரமேஷ் பாபு கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மோகனம்பாள்புரத்துக்குச் சென்ற அவர், நீண்ட நேரம் அங்கிருந்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார். நாகையை அடுத்த ஆவராணி புதுச்சேரி ரயில்வே கேட் அருகே வந்தபோது, எர்ணாகுளத்தில்இருந்து நாகை வழியாக காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ரமேஷ் பாபு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த நாகை ரயில்வே போலீஸார் அங்கு சென்று, ரமேஷ்பாபுவின் சடலத்த்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் பாபுவுக்கு அமுதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

SCROLL FOR NEXT