அரக்கோணம் அருகே தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே அதிகாரிகள் குழுவினர். 
தமிழகம்

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து: ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி காலி சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் நேற்று பகல் 1 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்தின் வடக்கு கேபின் வழியாக திருத்தணி ரயில் பாதையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயில் இன்ஜினில் இருந்து 24 மற்றும் 25-வது காலி பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. இதனால், அரக்கோணத்தில் இருந்து திருத்தணி செல்லும் ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தகவலை அடுத்து ரயில்வே பொறியாளர்கள் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளைத் தவிர்த்து மற்ற பெட்டிகளை பிரித்து மீண்டும் ஒன்றிணைத்து மாற்றுப் பாதையில் ரேணிகுண்டாவுக்கு அனுப்பி வைத்தனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளை தூக்கி நிறுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ரயில் பெட்டிகள் தடம்புரண்டதால் சென்னை நோக்கிச் சென்ற சங்கமித்ரா ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக அரக்கோணத்தை கடந்து சென்றது.

SCROLL FOR NEXT