“ரஜினிகாந்த் செய்ய வந்த அரசியலை நாங்கள் செய்கிறோம். அவரது கருத்துடன் நாங்கள் ஒத்துப்போகிறோம்” என , நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நாம் தமிழர்கட்சி வேட்பாளர்களை கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏற்கெனவே நாங்கள் தயாராகிவிட்டோம். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். 117 ஆண்கள், 117 பெண்கள் போட்டியிடுவார்கள். வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கூட்டங்களை நடத்திவருகிறோம். அமைப்புமாற்றம், அரசியல் மாற்றத்தை அடிப்படையாககொண்டு தன்னலமற்ற, நேர்மையான தூய தமிழர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் தேர்தல் செயல்பாடு இருக்கும். ரஜினிகாந்த் செய்யவந்த அரசியலை நாங்கள் செய்கிறோம். அவரது கருத்துடன் நாங்கள் ஒத்துப்போகிறோம்.
சிறையிலிருந்து விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறித்து சந்தேகிக்க வேண்டியுள்ளது. தமிழர்களை காங்கிரசும், தற்போது ஆட்சியிலுள்ள பாஜகவும் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்துகின்றன என்றார்.