ரவுடிகளையும், குண்டர்களையும் வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நாரயணசாமி இன்று (ஜன. 23) சட்டப்பேரவை கமிட்டி அறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரியில் மொத்தமுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் 50 சதவீத இடங்களை புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மார்ச் 23-ல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம்.
2 மாதங்களாகக் கோப்புகளை நிறுத்திவைத்துவிட்டு, அதை மத்திய உள்துறை ஒப்புதலுக்காக ஆளுநர் கிரண்பேடி அனுப்பிவைத்தார். உள்துறையில் இருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு இந்தக் கோப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து சில விளக்கங்களைக் கேட்டு அந்தக் கோப்பு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது.
அப்போது, மத்திய அரசு ஏற்கெனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மாற்ற விதிமுறை கொண்டுவரத் தேவையான ஆயத்த வேலைகளைச் செய்து வருவதாகவும், அதுகுறித்துப் புதுச்சேரி அரசு கருத்து தெரிவிக்கலாம் என்றும் அந்தக் கோப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குரிய பதில் அளித்து டிச.3-ம் தேதி மீண்டும் கோப்பை அனுப்பி வைத்துள்ளோம். தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீடாக இருக்கும்போது, புதுச்சேரிக்கு மட்டும் ஏன் வழங்கப்படுவதில்லை. புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இடங்களுக்கு மத்திய அரசும், ஆளுநரும் முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். இது புதுச்சேரி மாணவர்களை வஞ்சிக்கும் செயல்.
நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோது அதிலும் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். இது தொடர்பாக அரசாணை வெளியிட அனுமதி கோரி ஆளுநருக்குக் கோப்பு அனுப்பினோம். அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
மருத்துவப் படிப்பு மத்திய அரசின் அதிகார வரம்பில் இருப்பதால் அதுகுறித்து அரசாணை வெளியிட முடியாது என்று மத்திய சுகாதாரத் துறையிடம் இருந்து இப்போது பதில் வந்துள்ளது. மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய மின்துறை அமைச்சரை டெல்லியில் நேரில் சந்தித்து புதுச்சேரியில் மின்சாரத்தை தனியார் மயப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து ஆய்வு செய்ய விரைவில் குழு ஒன்றை அனுப்புவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். அதுவரை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
குடியரசு தின விழா நெருங்குவதால் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் அனுமதி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நேரில் சென்று ஆளுநர் கிரண்பேடி குறித்துப் புகார் அளிப்போம்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கப்பற்படையினரும், கடரோலக் காவல் படையினரும் தாக்குல் நடத்துவதை நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு, மத்திய அரசு உரிய கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
தற்போது ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது. தேடப்படும் குற்றவாளியான எழிலரசி பாஜக முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தது தொடர்பாக விசாரணை நடத்த டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.2.25 லட்சம் கோடி லாபம் கிடைக்கிறது. ஏழைகளையும், நடுத்தர மக்களையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.