தமிழகம்

குடியரசு தினத்தன்று புதுச்சேரியிலும் டிராக்டர் பேரணி: அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

அ.முன்னடியான்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் புதுச்சேரியில் 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று புதுச்சேரி மாநில அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்துக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செல்வ கணபதி, ராமமூர்த்தி, பத்மநாபன் ஆகியோர் முதலியார் பேட்டையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.23) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

''மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் கடும் குளிர், மழையில் போராடி வருகின்றனர். இதில் 143 விவசாயிகள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இதற்குத் தீர்வு கிடைக்காததால் அடுத்த கட்டமாக வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அன்றைய தினம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி புதுச்சேரியில் ஏஎஃப்டி மில் திடலில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் போராட்டம் தொடங்குகிறது. மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமை தாங்குகிறார். முதல்வர் நாராயணசாமி பேரணியைத் தொடங்கி வைக்கிறார். 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்கின்றன.

ஏஎஃப்டி திடலில் இருந்து தொடங்கும் பேரணி, பெரியார் சிலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, சிவாஜி சிலை, முத்தியால் பேட்டை, அஜந்தா சிக்னல், அண்ணா சிலை, புஸ்சி வீதி வழியாகக் கடற்கரைச் சாலை காந்தி திடலைச் சென்றடைகிறது''.

இவ்வாறு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT