தமிழகம்

சென்ட்ரல் ரயில் நிலைய சுரங்கப்பாதையை விரைந்து முடிக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சென்ட்ரல் ரயில் நிலைய சுரங்கப்பாதையை விரைந்து முடிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சென்னை மாநகராட்சி ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், 400 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் சதுக்கம் என்ற பெயரில், சுரங்க நடைபாதைகள், பேருந்து நிலையங்கள், மூன்றடுக்குச் சுரங்க வாகன நிறுத்தங்கள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், சுரங்க நடைபாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தில், அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதாகக் கூறி, அப்பணிகளை 15 நாட்களில் முடிக்க உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் பிரான்சிஸ் லயோலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “சுரங்க நடைபாதை அமைப்பதற்கான பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக பூந்தமல்லி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, அதன் மீது இரும்புத் தகடுகளைப் பரப்பி தற்காலிகப் பாலம் அமைத்து, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி, துறைமுகத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி, அந்த 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜப்பான் போன்ற நாடுகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒரு வாரத்தில் இதுபோன்ற சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்தத் தற்காலிக பாலத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT