பிரச்சாரப் பயணத்திற்காக கோவை வந்தார் ராகுல் காந்தி. பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தமிழக மக்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இரண்டாம் தரக் குடிமக்களாக நினைக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்.
'ராகுலின் தமிழ் வணக்கம்' என்கிற பெயரில் மேற்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய ராகுல் தமிழகம் வந்தார். கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் 3 நாட்கள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இன்று காலை கோவை வந்தார் ராகுல் காந்தி. பிரச்சாரக் கூட்டத்தின் இடையே கோவையில் சிறுகுறு தொழில் முனைவோரிடையே ஆலோசனை நடத்துகிறார்.
கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உடனிருந்தார்.
பிரச்சார வேனில் இருந்தபடி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
“மிகச் சிறப்பான வரவேற்புக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த மகத்தான தமிழகத்திற்கு வருவதற்கு எனக்கு எப்போதும் மகிழ்ச்சி உண்டு. தற்போது தமிழகத்தில், இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தைக் கொண்டுவருவதை நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். அது என்னவென்றால் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரேவிதமான செயல்பாடுகளைக் கொண்டுவர முயல்கிறார்கள். அதை எதிர்த்துப் போராடுகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களின் கலாச்சாரத்தை, மொழியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறையை இரண்டாம் பட்சமாகக் கருதுகிறார். இந்தியாவில் தமிழ் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக அவர் கருதுகிறார்.
இந்தியாவில் பல்வேறு மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை உள்ளது என நாங்கள் கருதுகிறோம். இந்தியாவில் தமிழ், இந்தி, வங்காளம் எனப் பல மொழிகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் சமமான உரிமை உள்ளது எனக் கருதுகிறோம். மோடிக்கும் எங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான். இதில்தான் நாங்கள் வேறுபடுகிறோம்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களாக உள்ள சில நண்பர்களுக்காக மோடி செயல்படுகிறார். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அவர்களுக்கு அனைத்து வசதிகள், மீடியாக்களை, நிதியை அவர் ஏற்படுத்தித் தந்துள்ளார். பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு, தமிழக மக்களுக்குச் சொந்தமான அனைத்தையும் ஒவ்வொன்றாக அவர்களுக்கு விற்று வருகிறார்.
இந்தியாவின் விவசாய மக்களை மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் வேலைக்காரர்களாக மாற்ற பிரதமர் மோடி முயல்கிறார். அதனால்தான் அவர்களை எதிர்த்து நாம் போராடுகிறோம். விவசாயிகள் பக்கம் நிற்கிறோம். தமிழ்நாடு என்கிற மாநிலம்தான் எந்த ஒரு விஷயத்திலும் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக உள்ளது.
இந்தியாவில் தற்போது புதிய தொழிற்சாலைகள், தொழில் அமைப்புகள் தேவைப்படுகின்றன. புதிய வேலை வாய்ப்புகள் தேவை. தமிழகம் அதற்கு ஒரு முன்னுதாரண மாநிலமாக இருந்துள்ளது. கடந்த காலங்களில் தமிழகம் தொழில் துறையில், உற்பத்தித் துறையில் முன்னேறிய மாநிலமாக இருந்தது. இந்தியா தமிழக மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அத்தகைய பெருமைகளைத் தற்போது தமிழகம் இழந்து வருகிறது. தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் நிலை உள்ளது. தமிழக விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். அதனால்தான் தமிழக மக்கள் புதிய வாழ்க்கை முறையை, புதிய அரசை நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
அதற்காகத்தான் நான் ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை உருவாக்க இங்கு வந்துள்ளேன். ஒரு புதிய அரசை அமைக்க, ஆட்சி மாற்றத்தை உருவாக்க உதவவே நான் இங்கு வந்துள்ளேன். காங்கிரஸ் அதற்காகப் பாடுபடும். சிறுகுறு தொழில் செய்வோர் சிரமத்தை அறிய நான் இங்கு வந்துள்ளேன். சிறுதொழில் செய்வோர், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் பிரச்சினையை அறிய நான் இங்கு வந்துள்ளேன்.
எனக்குத் தமிழக மக்களோடு உள்ள உறவு அரசியல் ரீதியானது அல்ல, குடும்ப உறவு. இது ரத்த சம்பந்தப்பட்ட உறவாகும். நம்மிடையே ரத்த சம்பந்தமான உறவு உள்ளது. அதற்காகத்தான் தமிழகம் வந்துள்ளேன். உங்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன். எனக்கு எந்தச் சுயநலமும் கிடையாது. நான் உங்களை நேசிக்கிறேன். உங்களுக்காக உழைக்கவே வந்துள்ளேன். இந்த உறவு நேர்மையான, உண்மையான உறவு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.