மழை குறைந்துள்ள நிலையில், சிதம்பரம் அடுத்த வடமூரில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்படுகிறது. 
தமிழகம்

பருவம் தாண்டி தொடரும் மழையால் கடலூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பாழானது: முழு காப்பீடும் வழங்க விவசாயிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழை காலம் முடிந்தும் மழை தொடர்வதால் சம்பா அறுவடை பாதிக்கப்பட்டு, மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் செலுத்திய தொகைக்கான பயிர் பாதிப்புக்கான முழு காப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சம்பாபருவத்தில் 96 ஆயிரம் ஹெக் டேரிலும், குறுவை பருவத்தில் 53 ஆயிரம் ஹெக்டேரிலும், நவரை யில் 20 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதில் டெல்டா பாசனத்தை நம்பி சம்பா பருவத்தில் 50 ஆயிரம் ஹெக்டேரிலும், குறுவைபருவத்தில் 25 ஆயிரம் ஹெக் டேரிலும் நெல் சாகுபடி செய்யப் படுகிறது.

நடப்பு சம்பா பருவத்தில் கடலூர்மாவட்டத்தில் ஏறத்தாழ 91 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை தொடங் கியிருக்கிறது. பருவம் தாண்டி மழை பெய்வதால் அறுவடை செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் மார்கழியை தொடர்ந்து தை மாதத்திலும் மழை பெய்வதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் விவசாயிகள், சிறு விவசாயிகள் சிலர் அறுவடை செய்திருந்தாலும், அவற்றை மழையிலிருந்து பாதுகாக்கும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக வீராணம் ஏரிராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் ரங்கநாயகி கூறுகையில், “விவசாயிகளின் வேதனை சொல்லி மாளாது. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேவைக்காக குரல் கொடுப்போம். தற்போது அதே தண்ணீரால் தத்தளிக்கிறோம். மேட்டுப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது, தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலைங்களில் மழை நீர் செல்ல வடிகால் வசதியின்றி தேங்கி நிற்கிறது. பருவம் தாண்டி பெய்யும் வடகிழக்குப் பருவமழையால் சம்பா சாகுபடி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நிலையை உணர்ந்த அரசு, தற்போது ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியுள்ளது. எந்த அடிப்படையில் இந்த 4 ஆயிரம் வழங்குகின்றனர் எனத் தெரியவில்லை. மழை இன்னும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்ற நிலையில் பாதிப்பை எப்படி இப்போதே கணக்கீடு செய்ய முடியும். அரசின் இந்த நடவடிக்கையை பார்த்து காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீட்டுத் தொகையை குறைத்து வழங்க வழிவகுக்கும். எனவே மழை நின்றவுடன் பாதிப்பை முழுதாக கணக்கீடு செய்து அதன் பின்னர் அரசு நிவாரணம் வழங்கலாம்.

பருவம் தாண்டி பெய்து வரும் மழையால், கடலூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முழு காப்பீட்டுத் தொகையையும் வழங்க முன்வர வேண்டும்“ என்றார்.

SCROLL FOR NEXT