தமிழகம்

பிளாஸ்டிக் கழிவை கொண்டு 92 பேருந்து தட சாலைகளை அமைக்க மாநகராட்சி திட்டம்

செய்திப்பிரிவு

சென்னையில் 92 பிளாஸ்டிக் பேருந்து தட சாலைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் டன் குப்பை உருவாகிறது. இதில் 7 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளாகும். குப்பையை அப்படியே குப்பைக் கிடங்குக்கு எடுத்துச்செல்லாமல் தவிர்ப்பதற்கு மாநகராட்சி பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நகரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவு களை சாலைகளை அமைக்க பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் முதன் முதலில் 2013-ம் ஆண்டில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை ஆகியவை பிளாஸ்டிக் கழிவை மூலப்பொருளாகக் கொண்டு போடப்பட்டன. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தூளாக் கப்பட்டு தார் கலவையுடன் 8 சதவீதம் அளவுக்கு கலந்து சாலை கள் போடப்படும். ஏற்கெனவே உள்ள தார் சாலைகளை 40 மி.மீ. ஆழத்துக்கு அகழ்ந்தெடுத்து அதன் மீது பிளாஸ்டிக் சாலைகள் போடப்படும். பிளாஸ்டிக் கழிவு களை தூளாக்கும் கருவிகள் சில இடங்களில் செயல்படாமல் இருந்ததால், பிளாஸ்டிக் சாலை போடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

தற்போது ராயபுரம், தண்டை யார்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய மண்டலங்களில் 92 சாலைகளை பிளாஸ்டிக் சாலைகளாக மாற்றுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 ஆயிரத்து 126 உட்புறச் சாலைகள் போடவும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT