தமிழகம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் ஜன.26-ல் டிராக்டர் பேரணி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜன.26 குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிராக்டர் பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது. அன்றைய தினம் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகு, திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும்.

கரோனாவைக் காரணம் காட்டி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஆன்லைனில் நடத்தும் முறையை அரசு கைவிட்டு, ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாக நடத்த வேண்டும். ஜனவரியில் பெய்த எதிர்பாராத கனமழையால் 25 லட்சம் ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, உளுந்து, பயிறு, மணிலா, மக்காச்சோளம், சூரிய காந்தி உள்ளிட்ட பலவகையான பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மீளமுடியாத இழப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, சேத மதிப்பு கணக்கெடுக்கும் பணியை அரசு போர்க்கால அடிப்படையில் முடித்து, அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT